மேயர் எச்.எம். காசிம் – Mayor H.M. Cassime

புதுச்சேரி சுதந்திர போராட்ட இஸ்லாமிய பெரியார்கள்

பிறப்பு

mayorcassime1
மேயர்  எச்.எம். காசிம்

1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  23 ஆம் தேதி அன்று முஹம்மது ஹனீப் என்பவருக்கும் முஹம்மத் மொய்தீன்பீபீ என்பவருக்கும் பிரெஞ்சு ஆளுமைக்கு உட்பட்டிருந்த பாண்டிச்சேரியில் பிறந்தார். அன்றைய பாண்டிச்சேரி இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரி (புதுவை) – Puducherry (Pudhuvai) என்று அழைக்கப்படுகிறது. இன்றைய பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் யானம் ஆகிய பகுதிகள் இணைந்த யுனியன் பிரதேசமாக திகழ்கிறது (Union Territory of Pondicherry).

எச்.எம். காசிம் அவர்கள் ஒரு கண்ணியமிக்க புதுச்சேரி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை முஹம்மது ஹனீப் அவர்கள் பிரெஞ்சு காலனி ஆக இருந்த வியட்நாம் நாட்டின் Bureau d’enregistrement எனும் பிரெஞ்சு அரசாங்கத்தின் பதிவு துறையில் 1902 ஆம் ஆண்டு ஒரு தற்காலிக முகவராக பணி அமர்த்தப்பட்டார். தன்னுடய திறமையினாலும், நம்பகத்தன்மயினாலும், அல்லாஹ் வின் நாட்டத்தாலும் படிப்படியாக பதவி உயர் அடைந்து Commis Principal (1ere classe) – தலைமை எழுத்தராக 1927 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

முஹம்மது ஹனீப் அவர்களின் சேவையை பாராட்டும் விதத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் மிக பெரிய விருதான Chevalier de la Légion d’Honneur எனும் செவாலியே விருதை பிரெஞ்சு அரசாங்கம் அன்னாருக்கு 1937 ஆம் ஆண்டு வழங்கியது.

புதுச்சேரியில் அன்று இருந்த அனாச்சாரங்கள்

hanif
செவாலியே முஹம்மது ஹனீப்

புதுச்சேரியில் அன்று பஞ்சா போன்ற ஷியாக்களின் அனாச்சாரங்கள் நிரம்ப இருந்தது. இது மட்டுமின்றி அன்று இருந்த, இன்றும் இருக்கக்கூடிய மிக பழம் பள்ளிகளான குத்பாபள்ளி மற்றும் மீராபள்ளி மஹல்லா வாழ் மக்களிடம் பல காலம் இருந்த வினோத பழக்கமும் ஒன்று. இஸ்லாமிய முஹர்ரம் மாதத்தில் 10 நாட்களுக்கு இரு பள்ளி  மஹல்லாவாசிகள் அவரவர் மஹல்லாவுக்கு சென்றுவிடுவர்.

legionhanif
முஹம்மது ஹனீப் அவர்களுக்கு வழங்கிய செவாலியே விருதின்  பிரெஞ்சு அரசாங்கத்தின் சான்றொப்பம்

கணவர் ஒரு மஹல்லாவாசியாக இருந்து மனைவி வேறொரு மஹல்லாவாசியாக இருந்தால் கூட அவர்கள் அந்த சில நாட்கள் பிரிந்து சென்று விடுவர். இந்த தினங்களில் அந்தந்த மஹல்லாவை சேர்ந்தவர்கள் சில நபர்களை நியமித்து மற்ற மஹல்லாவாசிகளிடம் ஏதேனும் மனக்கசப்பு இருந்தால் அவர்களை அந்த மஹல்லாவுக்கு செல்ல வைத்து அந்த நபரை பற்றி எல்லோர் முன்னிலையிலும் வசை பாட சொல்லுவர் . அந்த சில நாட்கள் முடிவடைந்தவுடன் அவரவர் தத்தமது இல்லங்களுக்கு திரும்பிவிடுவர்.

 

இது ஹனீப் அவர்களுக்கும், அவருடைய சம காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த ஹாஜி த.கு. முஹம்மது சைய்யத் எனும் வியாபார பெருந்தகைக்கும் மன உளைச்சலாகவே இருந்து வந்தது. ஹாஜி த.கு. முஹம்மது சைய்யத் அவர்களை பற்றி பின்னே எழுதப்படும். இந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர் புதுச்சேரியின் பிரெஞ்சு கவர்னராக பதவி வகித்து வந்தார். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி இந்த இரு இஸ்லாமிய பெரியவர்களும் இந்த பஞ்சா மற்றும் மேல் கூறப்பட்ட அனாச்சாரங்களை முற்றிலுமாக அகற்றி எறிந்தார்கள்.

இப்படி பட்ட நல்லோரின் மகனாக தான் எச்.எம். காசிம் அவர்கள் பிறந்தார்கள்.

பொது வாழ்வு மற்றும் வியாபாரம்

எச்.எம். காசிம் அவர்கள் தன் தந்தையை போன்று பிரெஞ்சு அரசாங்கத்தில் ஒரு அரசு ஊழியராக பணியாற்ற விருப்பம் அற்றரவராகவே இருந்தார். தனக்கென்று ஒரு வாழ்கையை தேர்ந்தேடுப்பதில் முனைப்பும் காட்டினார். ஆரம்பத்தில் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம் – Vietnam நாட்டின் ஹனோய் – Hanoi நகரத்தில் அன்று மிக பிரபலாமாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த வணிக வியாபாரியும், தனவந்தரும் ஆன த.கு. முஹம்மது சைய்யத் அவர்களின் Mohamed Said & Co. –  முஹம்மது சைய்யத் & கோ. எனும் வியாபார நிறுவனத்தில் பணியாற்றியதாக அறியப்படுகிறது.

mayorcassime2
வலக்கை ஓரமாக மாலையுடன் உட்கந்திருப்பவர்  எச்.எம். காசீம்

அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு தன்னுடைய 32 ஆம் வயதில் H.M.Cassime – எச்.எம். காசிம் எனும் தன் பெயரிலேயே ஒரு வர்த்தக நிறுவனத்தை புதுச்சேரியில் துவங்கினார். mayorcassime3இந்த நிறுவனம் முக்கியமாக வெளி நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து புதுச்சேரியில் வர்த்தகம் செய்தது. இந்த நிறுவனத்தை தன்னுடைய அயராது உழைப்பினாலும், நேர்மயினாலும் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் கிருபயினாலும் மிக லாபகரமாகவே நடத்தினார். இந்த நிறுவனம் கிட்ட தட்ட 3 தலைமுறைகளை தாண்டி நல்லதொரு வியாபார நிறுவனமாக செயல்பட்டது. இது மட்டும் இன்றி இவர் வைர வியாபாரமும் சிறிய அளவில் செய்துவந்தார்.

1946 ஆம் ஆண்டு இவர் வாழ்கையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். அந்த ஆண்டு தான் அவர் புதுச்சேரி நகரத்தின் துணை மேயராக தேர்தெடுக்கப்பட்டார். இந்த ஆரம்பம் அவரை படிப்படியாக அரசியலின் பால் தள்ளியது. 1946 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி நகராட்சியில் எச்.எம். காசிம் அவர்கள் பல பதவிகளை வகித்தார். இதன் விவரம் மற்றும் ஆதாரம் இதே பக்கத்தில் காணலாம்,

  •  26 June 1946 முதல்  27 October 1948 வரை – துணை மேயர்
  • 27 October 1948 முதல் 30 March 1954 வரை – துணை மேயர்
  • 30 March 1954 முதல் 22 October 1954 வரை – மேயர்
  • 22 October 1954 முதல் 18 November 1954 வரை – நகராட்சி குழு தலைவர்
  • 19 November 1954 முதல் 10 August 1955 வரை – நகராட்சி குழு துணை தலைவர்
  • 10 August 1955 முதல் 15 September 1956 வரை – துணை மேயர்
  • 15 September 1956 முதல் 3 November 1961 வரை – மேயர்

இவருடைய ஆட்சி காலத்தில் புதுச்சேரியின் பாரதி பூங்கா சீரமைப்பு, சுகாதார மற்றும் கல்வித்துறை மேம்பாடு மற்றும் இன்னும் பல சமூகநல திட்டங்கள் திறம்பட செயல்பட்டது.

கீழூர் வாக்கெடுப்பு

இந்திய நாட்டின் சுதந்திரம் புதுவையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது வரை சுதந்திர இந்தியா என்ற முழக்கம் புதுச்சேரியில் வலுவின்றியே இருந்தது. 1946 ஆம் ஆண்டு பிரெஞ்சு புதுசேரியின் அரசியல் வாழ்வில் காலடி வைத்த இவரை புதுவை சுதந்திர போராட்டம் தன்னின்பால் இழுத்தது.

kizhoor1
கீழூர் நினைவிட கல்வெட்டு

அன்றைய பிரெஞ்சு புதுச்சேரியின் முக்கிய அரசியல்வாதிகளான H.M.காசிம், கருணேந்திர முதலியார், பாலசுப்ரமணியன், தெய்வசிகாமணி, ரத்னசபாபதி, தனராஜா, எம்மானுவேல் டெட்டா, சின்னாத்த முதலியார், ஆரோக்கியநாதன், வெங்கடசாமி ரெட்டியார், ரத்னம் செட்டியார், லக்ஷ்மிநாராயண ரெட்டியார், வெனகடசுப்ப ரெட்டியார், தியாகராஜா நாயகர் புதுச்சேரி மற்றும் பிரெஞ்சு ஆளுமைக்கீழ் இருக்கும் மற்ற பகுதிகள் இந்தியாவுடன் கொண்டுள்ள இன, பூகோள, சரித்திர, பொருளாதார இன்னும் கலாச்சார தொடர்புகளையும், ஒற்றுமைகளையும் வலியுறுத்தி அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி பிரெஞ்சு அரசாங்கத்துக்கு பல தந்திகள் அனுப்பினார்கள். இது புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு மிக பெரிய பலத்தை குடுத்தது.1

இந்திய தேசம் இந்தியர்களுக்கே என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றியது. இந்த எண்ணம் தான் அவரை 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி கீழூர் என்னும் இடத்தில் நடந்த வாக்கெடுப்பில் புதுச்சேரி மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாஹி மற்றும் யானம் பகுதிகள் இந்தியா வுடன் இணைவது தான் சரி என்று அவரை இந்திய நாட்டுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது.

கீழூர் புதுச்சேரி நகரத்தில் இருந்து கிட்ட தட்ட 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 178 மக்கள் பிரதிநிதிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இதில் எச்.எம். காசிம் உட்பட 170 பேர்கள் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவது தான் சரி என்றும் இன்னும் 8 பேர்கள் சரி இல்லை என்றும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு தான் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை புதுச்சேரி மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்ட காரைக்கால், மாஹி மற்றும் யானம் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க சம்மதிக்க வைத்து. ஆனால் அந்த 170 பேர்களின் பெயர்களும் தியாகங்களும் புதுச்சேரி மக்கள் அநேகம் பேருக்கு தெரியாமலே போனது. இந்த பக்கத்துடன் கீழூர் இல் உள்ள இந்த வாக்கெடுப்பை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ள கல்வெட்டை இணைத்துள்ளேன். அந்த கல்வெட்டில் முதல் பெயராக எச்.எம். காசிம் அவர்களின் பெயர் பொதிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

சுதந்திர இந்தியாவில்

1962 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் புதுச்சேரி மக்களை மீண்டும் தன்னோட இணைப்பதற்கு வேறொரு விதத்தில் ஒரு வாய்ப்பு அளித்தது. OPTION – ஒப்ஸியோன் எனும் புதுச்சேரி மக்களால் இன்றும் நினைவு கூற கூடியதாக அமைந்தது அது. அதாவது பிரான்ஸ் நாடு புதுச்சேரி மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாஹி மற்றும் யானம் இல் வாழும் மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்தது. இந்த  மக்களில் யார் யாரெல்லாம் பிரெஞ்சு பிரஜை ஆகா விருப்பமோ அவர்களுக்கெல்லாம் பிரெஞ்சு நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்பதே அது. இதை ஏற்று  நிறைய பேர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றார்கள். ஆனால் எச்.எம். காசிம் அவர்களோ இதை ஏற்கவில்லை. அவர் இந்தியராகவே வாழ்ந்து மடிந்தார்.

சுதந்திர இந்தியாவில் அவர் புதுச்சேரியில் அமைந்துள்ள தென் ஆசியாவின் மிக பழமையான மற்றும் மதிப்புமிக்க Chambre de Commerce எனப்படும் வர்த்தகசபையின் தலைவராக 1966 முதல் 1986 இல் தான் மரணிக்கும் வரை பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் தான் புதுச்சேரி யை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று அப்போது இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் யும் தமிழக முதல்வராக இருந்த M.G. ராமச்சந்திரனும் கூட்டாக முயற்சி செய்தனர். எச்.எம். காசிம் அவர்களிடம் இருந்த போராட்டகுணதை இது மீண்டும் விழிக்க வைத்தது. இந்த புதுச்சேரி-தமிழக இணைப்பு எதிர்ப்புக்கு முதல் முதலாக ஆக்கபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியது எச்.எம். காசிம் அவர்களின் தலைமையிலான புதுச்சேரி யின் Chambre de Commerce எனப்படும் வர்த்தகசபையில் தான். இந்த தீர்மானம் தான் புதுச்சேரி யில் அரசியல் கட்சிகளை புதுச்சேரி-தமிழக இணைப்புக்கு எதிராக போராட தூண்டியது. இந்த தீப்பொறி தான் புதுச்சேரி மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி கொழுந்துவிட்டு எரிக்க செய்தது. ந்த புதுச்சேரி-தமிழக இணைப்புக்கு புதுச்சேரி மக்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி யில் அன்று வாழ்ந்த அனைத்து மக்களும், சிறியவர்கள் முதல் பெரியவர் வரை, ஒன்றினைந்து போராடியது இந்த காலகட்டத்தில் தான் புதுச்சேரி மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை கடைசியில் உணர்ந்த மத்திய அரசு இந்த இணைப்பை கைவிட்டது.  M.G. ராமச்சந்திரனின் இந்த புதுச்சேரி விரோத போக்கு தான் அவரையும அவர் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும்  இன்று வரை புதுச்சேரி யின் ஆட்சிக்கட்டில் புறக்கணிக்கிறது.

இது மட்டுமின்றி எச்.எம். காசிம் அவர்கள் 19  முதல் 1986 இல் தான் மரணிக்கும் வரை புதுச்சேரியின் மிக பழமையான பள்ளிவாசலான குத்பாப்பள்ளி யின் தலைமை முதவல்லியாகவும் செயல்பட்டார்.

விருதுகள்

இந்தியா

எச்.எம். காசிம் அவர்களின் மக்கள் மற்றும் பொதுநல சேவைகளை பாராட்டும் விதத்தில் இந்திய அரசாங்கம்,

  • புதுச்சேரியின் சின்ன கடை என்றழைக்கப்பட்ட அங்காடியை Janab H.M.Kassim Angadi – ஜனாப் H.M. காசிம் அங்காடி என்று பெயர் மாற்றம் செய்தது.
  • மேலும் புதுச்சேரியில் Ambour Salai ( Quai d’Ambour ) என்றழைக்கப்பட்ட சாலையை H. M. Cassime Salai – H.M. காசிம் சாலை என்று பெயர் மாற்றம் செய்தது.

பிரான்ஸ்

எச்.எம். காசிம் அவர்களின் மக்கள் மற்றும் பொதுநல சேவைகளை பாராட்டும் விதத்தில் பிரெஞ்சு குடியரசு அன்னாட்டின் இரு வெவ்வேறு செவாலியே உயர் விருதுகளை அவருக்கு அளித்து கவுரவித்தது. இந்த விருதுகளின் ஆதாரம் இந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • செவாலியே நிசான் எல் அநுஆர் – Chevalier de l’Ordre du Nichan el Anouar (French Republic)
  • செவலியே எத்துவால் தெ அன்ஜூஅன் – Chevalier de l’Ordre de l’Étoile d’Anjouan (French Republic)

nichananouar  etoileanjouan

 

 

குடும்பம்

எச்.எம். காசிம் அவர்களுக்கு இரு சகோதரர்கள். இவருக்கு இரண்டு தாரங்கள். முதல் மனைவியின் இறப்புக்கு பின்னரே இவர் ஒரு விதைவையரை மறுமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவியின் பெயர் உம்மாசல்மா. இவர் 1912 ஆம் ஆண்டு பிறந்து 1945 ஆம் ஆண்டு மவுத்தாகினார். இவர் மூலம் எச்.எம். காசிம் அவர்களுக்கு 4 ஆண்மக்களும் 2 பெண்மக்களும் பிறந்தனர். மேலும் 2 பிள்ளைகள் மிக சிறிய வயதினிலேயே மவுத்தாகினர். இன்னார் மூலம் பிறந்தவரே C.M. Acharaff அவர்கள்.

இரண்டாம் மனைவியின் பெயர் ஹமீதாபி. இவர் 1928 ஆண்டு பிறந்து 1987 ஆம் ஆண்டு மவுத்தாகினார். இவர் மூலம் எச்.எம். காசிம் அவர்களுக்கு 1 ஆண்மகனும் 4 பெண்மக்களும் பிறந்தனர்.

C.M. அஷ்ரப் – C.M. Acharaff ( C.M. Achraff )

1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 தேதி அன்று எச்.எம். காசிம் அவர்களுக்கு மூத்த மகனாக புதுச்சேரியில் பிறந்தார். சிறு வயது முதலே அவர் ஒரு துடிப்பு மிக்க இளைஞராக காணப்பட்டார். புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு நாட்டின் கல்விகூடமான Lycée Français de Pondichéry – லிசே பிரான்சே தெ பாண்டிச்சேரி யில் கல்வி பயின்றார். இவர் இங்கு Baccalaureate எனப்படும் இளங்கலை கல்வி கற்றதாக கூறப்படுகிறது.

அரசியல் வாழ்வு

tamrapatra
சுதந்திர போராளிகள் துறை – இந்திய அரசு செயலகம் – புதுச்சேரி வழங்கிய தாமரபட்ரா விருது பெற்றவர்களின் பட்டியலின் ஒரு பக்க நகல்.

தன்னுடைய 14 ஆம் வயதில் தன்னுடைய நண்பரான Antoine Vallabh Mariadassou – அந்துவான் வள்ளப் மரியதாஸு 1946 ஆம் ஆண்டு Students Congress de l’Inde Française எனும் பிரெஞ்சு இந்திய மாணவர் காங்கிரசை புதுச்சேரியில் ஸ்தாபித்தது இவருடைய அரசியல் வாழ்வின் முதல் படிக்கல்லாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

தந்தை எச்.எம். காசிம் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஒரு பிரஜையாக இருந்து கொண்டு இந்திய தேசப்பற்றை இதயத்தில் வளர்த்தபோது, தனயன் C.M. அஷ்ரப் பள்ளி செல்லும் வயது முதலே வெளிப்படையாக புதுச்சேரி விடுதலைக்காக போராடினார். புதுச்சேரி யின் இந்த சுதந்திர வேட்கை மிகுந்த இக்காலகட்டத்தில் தான் மூன்று மாணவர்கள், C.M. அஷ்ரப், ப்ரோஸ்பேர் தம்பி – Prosper Tamby மற்றும் L. பாலசுப்ரமணியன் – L. Balasubramanian, பிரெஞ்சு அரசாங்கத்தின் புதுச்சேரி-இந்தியா இணைப்பு எதிர்ப்பு அட்டூழியங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தனர்.2 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி C.M. அஷ்ரப் மற்றும் சிலர் ஒரு பஜனைக்கு ஏற்பாடு செய்து அங்கு இந்திய தேசிய கீதங்களை முழங்கவும் செய்தனர்.3 இப்படிப்பட்ட போராட்டங்கள் அவரை தான் ஒரு இந்திய தேசியவாதியாகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் அடையாளம் காட்டியது. காலம் அவரை சிறைக்குள்ளும் தள்ளியது.  வே. சுப்பையா போன்ற எண்ணற்ற போராளிகளின் முயற்சியாலும், எச். எம். காசிம் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் தேசபற்றாலும், C.M. அஷ்ரப், அந்துவான் வள்ளப் மரியதாஸு போன்ற இளவல்களின் தியாகங்களினாலும் புதுச்சேரி விடுதலை அடைந்தது என்று சொல்வது மிகையல்ல. புதுச்சேரியின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் பலர்.

புதுச்சேரியில் Papa – தந்தை என்றழைக்கப்பட்ட  Édouard Goubert – எட்வர்ட் குபேர் அவர்களுக்கு மிக நெருக்கமாகவும் ஆனார் C.M. அஷ்ரப் பின்னாளில். இந்த நெருக்கம் இவருடைய சுதந்திர இந்திய அரசியல் வாழ்கையின் ஆரம்பத்திற்கு பாதகமாகவும் முடிந்தது. புதுச்சேரி சுதந்திரம் அடைந்தபோது C.M. அஷ்ரப் அவர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியல்வாதியாக உருமாற்றம் பெற்றார். 1964 ஆம் ஆண்டில் தனது 32 வயதில் சுதந்திர புதுச்சேரியின் முதல் தேர்தலை அவர் சந்தித்தார். காமராஜர் க்கும் குபேர் அவர்களுக்கும் உள்ள பணிப்போரால் குபேர் விசுவாசிய என அடையாளம் காட்டப்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. காமராஜரின் இந்த முடிவு C.M.அஷ்ரப் அவர்கள் வாழ்ந்த புஸ்ஸி தொகுதியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அன்று இருந்த இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மனஉளைச்சலை தந்தது. இன்னும் சொல்லபோனால் காமராஜரின் இஸ்லாமிய வெறுப்பு கொள்கையாகவே அன்று இதை பார்க்கப்பட்டது.

20150110_212805
C.M. அஷ்ரப்   மற்றும்    ராஜீவ் காந்தி

C.M. அஷ்ரப் அவர்கள் மனம் தளரவில்லை. தன்னை ஒரு சுயேச்சை வேட்பாளராக பிரகடனப்படுத்தி தேர்தலையும் சந்தித்தார். மக்களின் ஏகோபித்த ஆதரவாலும் நல்உள்ளங்களின் முயற்சியாலும் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான பால் அம்ப்ரோசை வென்றார். அன்று ஆரம்பித்த அவருடைய அரசியல் பயணம் 1999 ஆம் ஆண்டு தன்னுடைய மவுத் – மரணம் அன்று தான் முடிந்தது. இறந்தபோதும் அவர் சட்டமன்ற உறுபினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அரசியல் பயணம் மீண்டும் அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்தது, 7 முறை சட்டமன்ற உறுபினராகவும் 1 முறை மந்திரியாகவும், 1 முறை துணை மேயராகவும் திகழ்ந்தார். இவர் மந்திரியாக இருந்தபோது தான் வக்ப் போர்ட் ஆக்கபூர்வமாக செயல்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் விருதுகள்

C.M. அஷ்ரப் அவர்களின் புதுச்சேரியின் சுதந்திரகால பங்களிப்பிற்காகவும், தேசபற்றுக்காகவும் அன்னாருக்கு இந்திய தேசம் சுதந்திர தியாகிகளுக்கு அளிக்கும் மிக பெரிய விருதான  “Tamrapatra – தாமரபட்ரா – தாமர பட்டயம்” எனும் விருதை அன்னாருக்கு வழங்கி கவுரவித்தது. Pondicherry Secretariat –  புதுச்சேரி செயலகதில் வழங்கப்பட்ட Tamrapatra – தாமரபட்ரா விருது பெற்றவர்களின் பட்டியலின் ஒரு பக்கம் இந்த இனையதல  பக்கத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது. அதில் C.M. அஷ்ரப் அவர்களின் பெயரை கடைசியில் காணலாம்.

இன்னும் அன்னாரை கவுரவிக்கும் விதத்தில் புதுச்சேரியின் ஒரு தெருவான கூடலூர் வீதியை Janab C.M.Achraff street – ஜனாப் C.M. அஷ்ரப் வீதி என்று பெயர் மாற்றம் செய்தது.4 இதை போலவே புதுச்சேரி மிலாத் தெருவில் அமைந்துள்ள Government Primary School – அரசு தொடக்க பள்ளிக்கு C.M.Achraff Govt. Primary School – C.M. அஷ்ரப் அரசு தொடக்க பள்ளி என்று பெயர் மாற்றம் செய்தது.5

குடும்பம்

C.M. அஷ்ரப் அவர்களுடைய மனைவியின் பெயர் ஜுபைதா காசிம்பீ. ஜுபைதா காசிம்பீ அவர்கள் புதுச்சேரியின் மரியாதைக்குரிய, இந்த கட்ட்ருரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட த.கு.முஹம்மது சைய்யத் அவர்களின் மகளார் ஆவார்கள். இவர்களுக்கும் C.M. அஷ்ரப் அவர்களுக்கும் பிறந்தவர்கள் 4 பெண்மக்களும் 1 ஆண்மகனும் ஆவர்கள்.

C.M. அஷ்ரப் அவர்கள் 1999 ஆம் ஆண்டு மவுத் ஆனார்கள். இன்னாரின் மறைவு இன்றுவரை புதுச்சேரி வாழ் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.

Footnotes
1. Merger Movement and the Transfer of Power, Pages 286-287
2. Jawaharlal Nehru and the Merger of the French Settlements into the Indian Union
3. The Freedom Movement in the French Settlement and the response of the People and the Press, Page No. 178
4. Koodalur street renamed as C M Achraff St
5. La Gazette de l’Etat – G.O. Ms. No. 14, dated 1st February 2010

Advertisements